நபிமொழி மருத்துவம்

 



நபிமொழி மருத்துவம்


ஒவ்வொரு நோய்க்கும் (மரணம் தவிர) மருந்தை அல்லாஹ் (சுப்ஹானஹூ வ தஆலா) நமக்காக ஏற்படுத்தியிருப்பது அவனது மகத்தான அருட்கொடைகளில் ஒன்றாகும். பல்வேறு நோய்களுக்கு நபி (ஸல்) பரிந்துரைத்த சில மருத்துவங்களின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:


கருஞ் சீரகம்

அல்லாஹ்வின்தூதர் (ஸல்) கூறினார்: "மரணம் (ஸாம்) தவிர்த்து ஒவ்வொரு நோய்க்கும் கருஞ் சீரகத்தில் நிச்சயமாக நிவாரணம் உள்ளது." (முஸ்லிம்)


ஸம்ஸம் தண்ணீர்

அல்லாஹ்வின்தூதர் (ஸல்) கூறினார்: "ஸம்ஸம் தண்ணீர் அது குடிக்கப்படும் நோக்கத்திற்காகவே (பயனுள்ளதாக) உள்ளது." (இப்னு மாஜா)

அல்லாஹ்வின்தூதர் (ஸல்) கூறினார்: "பூமியின் மீது உள்ள சிறந்த நீர் ஸம்ஸம் தண்ணீரே. அது ஒரு ஊட்டச்சத்தான உணவும், நோய்களுக்கான மருந்துமாகும்." (தபரானீ)

உர்வாபின் ஸுபைர் (ரலி) கூறுகிறார்: ஆயிஷா (ரலி) மக்காவிலிருந்து ஸம்ஸம் தண்ணீரை (வாளிகளில்) கொண்டுவருவார். மேலும் அவர் கூறுவார்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸம்ஸம் தண்ணீரை தோல் பைகளிலும் ஜாடிகளிலும் கொண்டுவருவார். நோயாளிகளின் மீது அதை ஊற்றுவதற்காகவும், அவர்களுக்கு அதைக் குடிப்பிப்பதற்காகவும் (கொண்டுவருவார்)." (திர்மிதீ)


ஆலிவ் எண்ணெய்

அல்லாஹ்வின்தூதர் (ஸல்) கூறினார்: "உணவில் மற்றும் (உடலில்) பூசுவதற்கு ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் அது ஒரு பாக்கியம் மிகுந்த மரத்திலிருந்து (கிடைக்கிறது)." (திர்மிதீ)


தேன்

"அவற்றின்(தேனீக்களின்) வயிறுகளிலிருந்து பல்வேறு நிறங்களில் ஒரு பானம் (தேன்) வெளிவருகிறது. மனிதர்களுக்கு அதில் நிவாரணம் உள்ளது." (குர்ஆன் 16:69)


தல்பீனா (பார்லி கஞ்சி)

ஆயிஷா(ரலி) நோயாளிகளுக்கும், இழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தல்பீனாவைப் பரிந்துரைப்பார். அவர் கூறுவார்: "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறக் கேட்டேன்: 'தல்பீனா நோயாளியின் இதயத்திற்கு ஆறுதல் அளிக்கிறது மற்றும் அவரது துக்கத்தையும் வருத்தத்தையும் சிறிது நீக்குகிறது.'" (புகாரீ)


அஜ்வா பேரீச்சை பழங்கள்

அல்லாஹ்வின்தூதர் (ஸல்) கூறினார்: "யார் காலையில் ஏழு அஜ்வா பேரீச்சை பழங்களை சாப்பிடுகிறாரோ, அன்றைய தினம் அவருக்கு மந்திரமோ விஷமோ தீங்கு விளைவிக்காது." (புகாரீ)


இந்திய குஸ்து மற்றும் கடல் குஸ்து (மருத்துவ மூலிகைகள்)

அல்லாஹ்வின்தூதர் (ஸல்) கூறினார்: "இந்திய குஸ்து (மூலிகை) மூலம் சிகிச்சை பெறுங்கள். ஏனெனில் அது ஏழு நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது; தொண்டைப் பிரச்சனை உள்ளவர் மூக்கால் முகரவேண்டும், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் (ப்ளூரிசி) உள்ளவர் வாயின் ஒரு பக்கத்தில் வைக்க வேண்டும்." (புகாரீ)

அல்லாஹ்வின்தூதர் (ஸல்) கூறினார்: "நீங்கள் சிகிச்சை பெறும் சிறந்த மருத்துவங்கள் குத்து குடுவை (ஹிஜாமா) மற்றும் கடல் குஸ்து (மூலிகை) ஆகும்." (புகாரீ)


குத்து குடுவை (ஹிஜாமா)

அல்லாஹ்வின்தூதர் (ஸல்) கூறினார்: "மக்களுக்கு மிகவும் பயனுள்ள மருந்து குத்து குடுவை (ஹிஜாமா) என ஜிப்ரீல் (அலை) எனக்கு அறிவித்தார்." (ஹாகிம்)


பசுவின் பால் (பச்சையாக)

அல்லாஹ்வின்தூதர் (ஸல்) கூறினார்: "முதுமை தவிர, அல்லாஹ் ஏற்படுத்திய ஒவ்வொரு நோய்க்கும் அவனே நிவாரணம் ஏற்படுத்தியுள்ளான். ஆகவே, பசுக்களின் பாலைக் குடியுங்கள். ஏனெனில் அவை அனைத்து வகையான செடிகளையும் (மேய்ந்து) உண்கின்றன." (நஸாயீ)


சன்னா மூலிகை (Indian Senna)

அல்லாஹ்வின்தூதர் (ஸல்) கூறினார்: "சன்னா மூலிகை மற்றும் தேன் (சன்னூத்) ஆகியவற்றை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். ஏனெனில், மரணம் (ஸாம்) தவிர்த்து ஒவ்வொரு நோய்க்கும் அவ்விரண்டிலும் நிவாரணம் உள்ளது." ("அல்லாஹ்வின் தூதரே! 'ஸாம்' என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் (ஸல்) "மரணம்" என்று பதிலளித்தார்." (இப்னு மாஜா)


குறிப்பு: குறிப்பிட்ட நோய்களுக்கு மேலே குறிப்பிடப்பட்ட சிலவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு, ஒரு மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.


தடுப்பு, நிவாரணத்தை விட சிறந்தது


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்: "தன் வயிற்றை விட மோசமான பாத்திரத்தை மனிதன் நிரப்புவதில்லை. முதுகு நேராக நிற்கச் செய்யும் சில கவளங்கள் அவனுக்கு போதுமானதாகும். அவன் (அதிகம் உண்ண) விரும்பினால், மூன்றில் ஒரு பகுதியை உணவுக்காகவும், மூன்றில் ஒரு பகுதியை பானத்திற்காகவும், மூன்றில் ஒரு பகுதியை (எளிதாக) சுவாசிப்பதற்காகவும் விட்டுவிட வேண்டும்." (திர்மிதீ)


அல்லாஹ் நமக்கு நினைவூட்டுகிறான்: "மனிதர்களே, பூமியில் உள்ள ஹலாலான (அனுமதிக்கப்பட்ட) தய்யிபான (தூய்மையான) பொருட்களில் நீங்கள் உண்ணுங்கள். மேலும் ஷைத்தானின் படிகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான பகைவனாக இருக்கின்றான்." (2:168)

Comments