ருக்யா என்றால் என்ன?
‘ருக்யா’ என்பது குர்ஆனிய வசனங்கள் மற்றும் அல்லாஹ்வின் தூதர் ﷺ கற்பித்த துஆக்கள் மூலம் நோய்களைக் குணப்படுத்தும் முறையாகும். இது கண்ணூறு, சூனியம், ஜின்கள் மற்றும் உடல்நலக் கோளாறுகளுக்கான ஒரு வழிகாட்டுதலாகும்.
குர்ஆன் ஒரு முஃமினுக்கு மனதளவிலும் உடலளவிலும் முழுமையான ஆறுதலையும் வழங்குகிறது. எனவே, ருக்யா நம் வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கை வகிக்க வேண்டும். அல்லாஹ் (சுப்ஹானஹூ வ தஆலா) கூறுகிறான்: "மேலும் (நபியே!) "உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழிவதாகவே உள்ளது" என்றும் கூறுவீராக!
[அல்குர்ஆன் 17:81]
"மேலும் நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக் குர்ஆனில் இறக்குகிறோம். அநீதி இழைத்தோருக்கு (அது) நட்டத்தையே அதிகப்படுத்தும்.
[அல்குர்ஆன் 17:82]
நோய் நீக்கும் ஒரு வழியை வழங்குவதோடு, ருக்யா முஃமின்கள் தங்கள் ஈமானை வலுப்படுத்தவும், அல்லாஹ்வின் மீதான தவ்ஹீதை மீண்டும் உறுதிப்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும். ஏனெனில், குர்ஆனின் மூலம் நிவாரணம் தேடுவது, அல்லாஹ்வின் கிதாப் மீதான முழுமையான நம்பிக்கையை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறினார்கள்: "இரண்டு நிவாரணங்களை (மருந்துகளை) பயன்படுத்துங்கள்: தேனும், குர்ஆனும்." (இப்னு மாஜா)
ஆயிஷா (ரடியல்லாஹு அன்ஹா) கூறினார்: "அல்லாஹ்வின் தூதர் ﷺ நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவருக்கு ருக்யா செய்தார்." (முஸ்லிம்)
ஆயிஷா (ரடியல்லாஹு அன்ஹா) தெரிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர் ﷺ என் அறைக்கு வந்தபோது, ஒரு பெண் (அல்லாஹ்வின் வசனங்கள் அல்லாதவற்றைக் கொண்டு) எனக்கு ருக்யா செய்து கொண்டிருப்பதைக் கண்டார். அப்போது அவர் ﷺ கூறினார்: "அவளுக்கு அல்லாஹ்வின் கிதாப் (குர்ஆன்) மூலமாக இருக்யா செய்யுங்கள்." (இப்னு ஹிப்பான்)
மேலும் அவர் (ரடியல்லாஹு அன்ஹா) கூறினார்: "கண்ணூறு தீங்கிலிருந்து பாதுகாக்க இருக்யா செய்யும்படி அல்லாஹ்வின் தூதர் ﷺ எனக்கு கட்டளையிடுவார்." (முஸ்லிம்)
ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் ﷺ உம்மு சலமா (ரடியல்லாஹு அன்ஹா) இன் வீட்டில், முகம் மாறுபட்டு (வாட்டம்) இருந்த ஒரு சிறுமியைப் பார்த்து, "அவளுக்கு ருக்யா செய்யுங்கள், ஏனெனில் அவள் கண்ணூறினால் பாதிக்கப்பட்டுள்ளாள்" என்று கூறினார். (புகாரி)
ஆயிஷா (ரடியல்லாஹு அன்ஹா) விவரிக்கையில்: அல்லாஹ்வின் தூதர் ﷺ நோய்வாய்ப்படும்போது, (குர்ஆனின் கடைசி மூன்று சூராக்களை) ஓதி, பின்னர் தம் உடலின் மீது (கைகளில் ஊதி தடவிக்) கொள்வார். அவர் (ரடியல்லாஹு அன்ஹா) கூறுகிறார்: "இறுதியாக இறப்பிற்கு கொண்டுசென்ற அந்த நோயின் போது, நபி ﷺ தம்மீதே (கைகளில்) ஊதிக்கொண்டிருந்தார். ஆனால் நோய் கடுமையாகும்போது, அவரது கைகளின் பரக்கத்திற்காக நான் (சூராக்களை ஓதி) அவரது கைகளால் அவர்மீது ஊதினேன்." (புகாரி)
மற்றொரு ஹதீஸில், ஆயிஷா (ரடியல்லாஹு அன்ஹா) கூறுகையில்: அவரது குடும்பத்தில் யாரேனும் நோய்வாய்ப்பட்டால், நபி ﷺ இந்த மூன்று சூராக்களை ஓதி அவர்கள்மீது ஊதுவார். (முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதரின் ﷺ மருத்துவமனை
அல்லாஹ்வின் தூதர் ﷺ பயன்படுத்திய மூன்று வகையான மருத்துவ முறைகள்:
1. இறை மருத்துவ முறை - அதாவது இருக்யா.
2. இயற்கை மருத்துவ முறைகள் - தேன், கருஞ்சீரகம், ஜைதூன் எண்ணெய், ஸம்ஸம் தண்ணீர், குத்துக் கம்பு (ஹிஜாமா) போன்றவை.
3. இறை மற்றும் இயற்கை மருத்துவ முறைகளின் கலவை.
சிறந்த மருத்துவம்
இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ) எழுதுகிறார்:
"குர்ஆன்என்பது அனைத்து மன, ஆன்மீக மற்றும் உடல் நோய்களுக்கும் முழுமையான நிவாரணமாகும்; இம்மை மற்றும் மறுமையின் அனைத்து நோய்களுக்கும் மருந்தாகும். ஆனால் நிவாரணத்திற்காக அதைப் பயன்படுத்துவதற்கு அனைவரும் வழிகாட்டப்படுவதில்லை. நோயாளி சரியான முறையில் குர்ஆனை நிவாரணத்திற்காகப் பயன்படுத்தி, நோய்க்கு அதை நேர்மை, ஈமான், முழுமையான ஏற்பு மற்றும் உறுதியான நம்பிக்கையுடன் பயன்படுத்தி, அதன் நிபந்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றினால், எந்த நோயும் அதை எதிர்க்க முடியாது."
"வானங்கள் மற்றும் பூமியின் இறைவனின் வார்த்தைகளை எந்த நோய் எதிர்க்க முடியும்? அவன் அந்த (வார்த்தைகளை) மலைகளுக்கு அருளினால், அவை நசுங்கிப்போகும்; பூமிக்கு அருளினால், அது பிளந்துபோகும்."
"ஆன்மீகமாக இருந்தாலும் சரி, உடல்ரீதியாக இருந்தாலும் சரி, எந்த நோயும் இல்லை; ஆனால் குர்ஆனில் அதன் மருந்து, அதன் காரணம் மற்றும் அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழி பற்றிய வழிகாட்டுதல் உள்ளது; அவனுடைய கிதாபைப் புரிந்து கொள்ளும் பாக்கியம் பெற்றவர்களுக்கு." (ஸாதுல் மஆத்)
"குர்ஆனால் நிவாரணம் அடையாதவரை அல்லாஹ் நிவாரணம் அடையச் செய்யாமல் இருப்பானாக. குர்ஆனைத் தன்னால் போதுமானதாகக் காணாதவரை, அல்லாஹ் எதனாலும் போதுமானவராக ஆக்காமல் இருப்பானாக." (இப்னுல் கய்யிம் ரஹிமஹுல்லாஹ)
Comments
Post a Comment